கிராமங்களிலேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி

44
0
Spread the love

கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்துவருவதற்குப் பதிலாக, கிராமங்களிலேயே பொருளாதார வாய்ப்புகளையும் அடிப்படை வசதிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் மேம்பட்ட வீதிக் கட்டமைப்பு, சிறந்த தொடர்பாடல் வசதிகள் மற்றும் வினைத்திறனான அரச சேவையை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் தொடர்பாடல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதுடன், பொதுமக்கள் அரச அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னோடித் திட்டத்தை அடுத்த ஆண்டு இரண்டு மாவட்டங்களில் ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அரச சேவையை வலுப்படுத்துவதற்காக வாகனங்கள், கணினிகள் மற்றும் அலுவலகக் கட்டட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 2027ஆம் ஆண்டில் 330 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகக் கொடுப்பனவு 1,000 ரூபாவிலிருந்து 2,000 ரூபாவாகவும், சீருடைக் கொடுப்பனவு 5,000 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவாகவும், எழுதுபொருட்களுக்கான கொடுப்பனவு 1,500 ரூபாவிலிருந்து 3,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச சேவையை அரசியல்மயமாக்காமல், மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்கும் வகையில் அதனை மறுசீரமைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய கிராம உத்தியோகத்தர்கள், பிறப்பு, இறப்பு, அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் பொதுமக்கள் முதலில் நாடும் அதிகாரிகளாக உள்ளனர். எனவே, மக்களுடனான அன்பானதும் மரியாதைக்குரியதுமான உறவைப் பேணி, பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் புதிய நியமனதாரர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற 28 பேருக்கு ஜனாதிபதியால் அடையாள ரீதியாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here