இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை மாணவர்கள் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த போட்டியில் பங்கேற்ற இலங்கை மாணவர்கள் நேற்று முன்தினம் (07) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பினர்.
உலகின் 23 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற இப்போட்டி, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் ஒக்டோபர் 02 முதல் 06ஆம் திகதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 24 மாணவர்களில், கணிதப் பிரிவில் இருவர் வெள்ளிப் பதக்கங்களையும் ஆறு பேர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். விஞ்ஞானப் பிரிவில் ஒருவர் வெள்ளிப் பதக்கத்தையும் நால்வர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனர்.
பாடசாலை, கல்வி வலயம், மாகாணம் மற்றும் தேசிய மட்டங்களில் நடத்தப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, கணிதப் பிரிவில் 12 மாணவர்களும் விஞ்ஞானப் பிரிவில் 12 மாணவர்களுமாக 24 பேர் கொண்ட குழு போட்டியில் பங்கேற்றது.
கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி இந்தோனேசியா புறப்படுவதற்கு முன்னர், மாணவர்கள் பிரதமரைச் சந்தித்தனர். இதன்போது, 24 மாணவர்களினதும் விமானப் பயணச்சீட்டுகளுக்கான முழுச் செலவையும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முதன்முறையாக ஏற்றுக்கொண்டதுடன், பயணச்சீட்டுகளும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.







