காலி துறைமுகத்தில் சர்வதேச பாதுகாப்புப் பயிற்சி

41
0
Spread the love

இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு (ISPS) பயிற்சி, நேற்று (08) வியாழக்கிழமை காலி துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதன்போது, அனுமதியற்ற நபர்கள் துறைமுகத்திற்குள் நுழைவதைத் தடுத்தல், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், பயங்கரவாதத் தாக்குதல்களின் போது விரைவாகவும் ஒருங்கிணைந்த வகையிலும் பதிலளித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதுடன், அவசரநிலைகளின்போது துரிதமாகச் செயற்படுதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியனவும் இப்பயிற்சியின் மூலம் மேம்படுத்தப்பட்டன.

சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு விதிமுறையின் (ISPS Code) தேவைகளுக்கு அமைவாக, காலி துறைமுகத்தின் பாதுகாப்புத் தயார்நிலையை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இப்பயிற்சி அமைந்தது.

தெற்கு கடற்படை கட்டளையின் தீயணைப்புப் பிரிவு, CBRN பிரிவு மற்றும் இலங்கை கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு ஆகியன இப்பயிற்சியில் பங்கேற்று செயற்பாட்டு ஆலோசனைகளை வழங்கின.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிஸின் துறைமுகப் பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here