மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, சமூகச் சீரழிவுக்குக் காரணமாக அமையும் மதுபானசாலைகளை அகற்றுவதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நான்கு இடங்களில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக அல்லது உரிய விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட மதுபானசாலைகள் காணப்படுமாயின், அவற்றை உடனடியாக மூடுவதற்குத் தேவையான கடுமையான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும், தெல்லிப்பழையில் மதுபானசாலைகளுக்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய மதுபானசாலைகளை அகற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.







